Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

colachel-fish

தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தடைகாலம்

ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

மீன் பிடிக்க சென்றனர்

இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.

உயர் ரக மீன்கள் சிக்கின

உடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

போட்டி போட்டு ஏலம்

மீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.

மீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

விலை கட்டுப்படியாகவில்லை

கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-

45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.

அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

சின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *