வட்டக்கோட்டை முதல் கன்னியாகுமரி வரை இரு சொகுசு படகுகள் இயக்க திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், வட்டக்கோட்டையில் இருந்து கன்னியாகுமரி சூரிய அஸ்தமன மையம் வரை இரு சொகுசு படகுகள்  இயக்கப்பட உள்ளன என, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவசண்முகராஜா தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக படகு சேவை இருப்பதால், கடந்த 2019-ம் ஆண்டு குளுகுளு வசதிகளுடன் கூடிய திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு அதிநவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு படகு சேவைக்கு தயாரானது.

ஆனால், இவை பெரிய படகுகள் என்பதால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லம் மற்றும்விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பாறையில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான வசதிகள் இல்லை. இதைத்தொடர்ந்து சில நாட்கள் மட்டும் சவாரி மேற்கொள்ளப்பட்ட நவீன படகுகள் இரண்டும் படகு தளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு சொகுசு படகுகளை சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இயக்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவசண்முகராஜா கூறியதாவது: புதிதாக வாங்கப்பட்ட இரு சொகுசு படகுகளையும் இயக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கன்னியாகுமரி பூம்புகார் படகு தளத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இவ்விரு படகுகளும் புறப்படும். வட்டக்கோட்டை, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சன் செட் பாயின்ட் ஆகிய இடங்கள் வழியாக மீண்டும் படகு தளத்தை படகுகள் அடையும். சுற்றுலா பயணிகள் எங்கும் இறங்க அனுமதி இல்லை. படகில் இருந்தபடியே இவ்விடங்களைக் கண்டு களிக்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *