குளச்சல் துறைமுகத்தை ரூ.21 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழக அரசு பதில்கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவிலான துறைமுகமாக அமைக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தற்போது தமிழக அரசின் சார்பில் குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.சாலை, ரெயில் போக்குவரத்துதுறைமுகத்துக்கு சாலை இணைப்பு மற்றும் ரெயில் வசதி ஏற்படுத்துவதற்கான ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக 4 வழி சாலை திட்ட பணிகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பயன் அடையும்.குளச்சல் துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக சுமார் ரூ.7ஆயிரம் கோடி, 2-வது கட்டமாக ரூ.6 ஆயிரம் கோடி, 3-வது கட்டமாக ரூ.7 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசால் நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.
அந்நிய செலாவணி அதிகரிக்கும்செயல்பாட்டுக்கு வரும்போது குளச்சல் துறைமுகத்தில் இருந்து பல நாடுகளுக்கும் சரக்கு ஏற்றுமதி செய்ய வழி ஏற்படும். ஆண்டுக்கு சுமார் 17 லட்சம் டன் சரக்கு இந்த துறைமுகம் மூலமாக கையாளப்படும். தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தேவையான 500 ஏக்கர் நிலத்தை கடலில் மண்ணை நிரப்பி ஏற்படுத்த திட்டம் உள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி இழப்பில் இருந்து மீட்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் குளச்சல் துறைமுகம் மூலமாக ஏற்படும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Source : Dailythanthi