Tag Archives: கல்லறை

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார்

நித்திரவிளை: நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார். குமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள பல்லுக்குழி மேலவிளை பகுதியை சேர்ந்தவர் அப்பியான் மகள் ரோசி (55). திருமணமாகவில்லை. சிறுவயதில் இருந்தே முந்திரி ஆலைகளில் ரோசி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அக்கம்பக்கத்து வீடுகளில் உதவிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

 இதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி மேலவிளை பகுதியில் ஏழரை சென்ட் இடம் வாங்கி, அதில் சிறிய வீடு வைத்து தனியாக வசித்து வருகிறார். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் முந்திரி ஆலைக்கு செல்லாமல் இந்த பணிக்கு சென்று வந்தார். விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலைக்கு சென்றதால் சூழால் ஊராட்சி சார்பில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை உறவினர்கள் யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
 மேலும் சிலர் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வார்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். இதனால் தனக்குத்தானே கல்லறை கட்ட திட்டமிட்ட ரோசி சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்லறை கட்டி வைத்துள்ளார். கடந்த மாதம் இதற்கான பணி தொடங்கியுள்ளார். தேவையான ஆழத்தில் பள்ளம் தோண்டி, கீழ்பகுதியில் இருந்தே கல்லால் கட்டி எழுப்பி மேலே அழகாக கடப்பா கல் பதித்து தனது படம், பெயரை பொறித்து சிலுவையும் அமைத்துள்ளார்.
 இவரை அடக்கம் செய்யவேண்டுமானால் ேமல் பகுதியை கழட்ட தேவையில்லை. தலை பகுதிக்கு கீழே வெளிப்பகுதியில் சிறிது பள்ளம் தோண்டினால் உள்ளே உள்ள பள்ளம் தெரியும். பெட்டியில் உடலை வைத்து தள்ளினால் உள்ளே சென்று விடும். இந்த அமைப்பில் அவர் தனக்கான கல்லறையை அமைத்து வைத்துள்ளார் இது குறித்து ரோசி கூறுகையில், “எனது ஊர் பல்லுக்குழி அருகே உள்ள செறுகுழி. எனது பெற்றோருக்கு நான் ஆறாவது மகள். ஐந்து சகோதரிகளுக்கும், தம்பிக்கும் திருமணம் நடந்து. அவர்கள் தனியாக வசிக்கின்றனர். இறக்கும் போது யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று கருதி எனக்கு நானே கல்லறை கட்டிக்கொண்டேன் என்றார்.