Mar 15, 2016 General, Health, Yoga 0
ஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு வேண்டப்படாதவரோ அல்லது நம் எதிரியோ அவர் வாழ்க்கையில் சரிவை சந்தித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அந்த எதிரியையும் வெற்றிகண்டு நாம் வாழ்வில் உயர்வது எப்படி? இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு…
வெளியே தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டேன். யாரோ ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்துவிட்டதாம். இன்னொரு நடிகரின் ரசிகர் மன்றம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாகச் சொன்னார்கள். என்ன அபத்தம் இது?
கால்பந்து விளையாடப் போகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஒரு அணி இருக்கும். அது உங்களைவிட திறமையான அணியாக இருந்தால், உங்களை கோல் போடவிடாமல் தடுக்கும். நீங்கள் அசந்த நேரம் உங்கள் பக்கம் கோல் போட்டுவிடும். அதற்காக அந்த அணியை எதிரியாக நினைத்து, மைதானத்தை விட்டே துரத்திவிடுவீர்களா என்ன?
எதிர்க்க இன்னொரு அணியே இல்லை என்றால், நீங்கள் நினைத்த நேரத்தில் பந்தை எடுத்துக் கொண்டு எதிர்ப்பக்கம் போகலாம். அங்கேயிருக்கும் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் எத்தனை தடவை வேண்டுமானாலும் உதைத்து கோல் போடலாம். ஆனால், அதன் பெயர் கால்பந்தாட்டமா? அல்லது, வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு இணையாக இல்லாத கற்றுக்குட்டிகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பீர்களா?
யமகுசி என்ன செய்தார்?
யமகுசி, கராத்தேயில் மிகச் சிறந்த வீரர். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தவர். ஒருமுறை போட்டியில் அவர் தன் குருவையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனக்குத் தெரிந்த அத்தனை விதத்திலும் முயற்சி செய்தார் யமகுசி. குருவை வீழ்த்த முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தார் யமகுசி. கோபத்தில் தவறான சில வீச்சுகளை முயற்சி செய்ததில், நிறைய காயங்களானதுதான் மிச்சம்.போட்டி முடிந்ததும், குருவைப் பணிந்து தன் தோல்விக்குக் காரணம் கேட்டார்.
“நீ என்னை எப்படிப் பார்த்தாய், மகனே?”
“போட்டியென்று வந்துவிட்டால், குரு, சிஷ்யன் எல்லாம் கிடையாது. உங்கள் பலவீனங்களை கண்டுபிடித்து உங்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்றுதான் பார்த்தேன். ஆனாலும், முடியவில்லையே குருவே!”
ஒரு தரையில் ஒரு கோடு வரைந்தார்.
“இதை சிறிதாக்க வேண்டுமானால், என்ன செய்வாய்?”
யமகுசி அந்தக் கோட்டின் ஒரு பகுதியை அழித்துக் காட்டினார்.
“இதே கோடு அழிக்க முடியாதபடி பாறையில் இருந்தால்?”
யமகுசிக்கு விடை சொல்லத் தெரியவில்லை.
குரு அந்தக் கோட்டின் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைந்தார்.
“இப்போது முதல் கோடு சிறியதாகி விட்டதல்லவா? யாரையாவது வெற்றி கொள்ள வேண்டுமானால், அவனைத் தாழ்த்த வேண்டுமென்று முயற்சி செய்யாதே! அவனைவிட அதிகமான உன் திறமையை வளர்த்துக் கொள். உனக்காக விளையாடு. அவனுக்கு எதிராக விளையாடாதே!”
யமகுசி தெளிவடைந்தார்.
நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடன் போட்டு போடுபவரை உங்கள் எதிரியாகப் பார்ததீர்களானால், உங்கள் நிம்மதி தொலைந்து போகும்.
யார் முட்டாள்?
தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் ‘முட்டாள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?
காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா?
அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா?
நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.
அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.
முழுத்திறமையும் வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுவதில்தான் உண்மையான வெற்றியே இருக்கிறது. அதற்கு உங்கள் உடல், மனம் – இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.
இதற்கு முறையான யோகாவை விடச் சிறந்த சாதனம் இல்லை.
Dec 18, 2018 0
Dec 16, 2018 0
Dec 19, 2017 0
Dec 18, 2017 0
This architectural pilgrim centre derive its name from the Virgin goddess Kanyakumari, to whom the temple is dedicated. Goddess Parashakti (Devi Kanya) did punishment to protect shiva's hand in a marriage. She sweared to remain a virgin as she couldn't attain her objective...