மதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்.
அதன்படி சசிபெருமாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாமலை பகுதிக்கு வந்தர். அப்போது அவரும், ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயசீலன் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் செல்போன் கோபுரத்தின் பாதி வழியில் அமர்ந்து கொண்டார். சசி பெருமாள் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கே ஏறிவிட்டார்.
தகவலறிந்து, சுமார் 8.30 மணியளவில், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து, தக்கலே டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தடைந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் வரவிலை.
சசிபெருமாள் போராட்டத்தை துவங்கி 5 மணி நேரத்துக்குப் பின்னர் டாஸ்மாக் உயரதிகாரி அங்கு வந்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உண்ணாமலை பகுதியில் இருந்து ஏற்கெனவே கடையை அகற்றுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது என்றனர். உண்ணாமலை பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை மூடப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர்.
அதன்பின்னர் செல்போன் கோபுரத்திலிருந்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.
மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சசிபெருமாள் திடீர் மரணத்துக்கு அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததுகூட காரணமாக இருக்கலாம். இருப்பினும், உறுதியான தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.
சசிபெருமாள் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 ஆண்டு அவர் தொடர்ந்து 34 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூரண மதுவிலக்கு கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
Source : The Hindu