நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுமார் 450 கோடியில், சிறிய விண்கலம் உள்பட அதிநவீன தொழில்நுட்பத்துடன், விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைகிறது. கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் என்றாலும், இங்கு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவர எவ்வித வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. பல திட்டங்கள் பல கோடிகளை முடக்கி ஏற்படுத்தினாலும், அவை செயல்படாமல் சுற்றுலா பயணிகளுக்கு பயன் இன்றி முடங்கி ேபாய்கிடக்கின்றன. இந்நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, சுற்றுலா வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இதற்கேற்ப மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரைப்படி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆய்வு செய்து சென்றார். இதனை தொடர்ந்து முட்டம் கலங்கரை விளக்கத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கு பாலம் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் பற்றி சிறப்பு குழு அமைத்து பல்வேறு ஆலோசனைகள் செய்து வருகிறார். இதற்கிடையே, கன்னியாகுமரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைய உள்ளது. இதற்காக அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், இஸ்ரோ சார்பில் புதியவன் உள்ளிட்ட அதிகாரிகளும், யாருக்கும் இடையூறு இல்லாத வகையில், இடம் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே இந்த திட்டம் குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது தெரிவித்ததாவது:சர்வதேச தரத்தில், அமைய உள்ள இந்த திட்டத்தில், 200 பேர் அமரும் வகையில் பிளானட்டோரியம் அமைக்கப்படும். இதன் நடுவில் அனைத்து கோள்களும் கொண்ட விண்வெளி பாதை (கேலக்ஸி) அமைக்கப்பட்டு, பூமி பந்து சுழல்வதுபோல் அமைக்கப்படும்.
*பிரபஞ்சம் உருவான வரலாறு, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது எப்படி, மழை பெய்வது எப்படி என்பது குறித்த விளக்க கண்காட்சி இடம் பெறும்.
* விண்கலத்தில் செல்லும் அனுபவத்தை மாணவர்கள், பாமர மக்கள் உணரும் வகையில், சிறிய நிஜ விண்கலம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள், பார்வையாளர்கள் இதன் உள்ளே சென்று விண்கலத்தில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தை நிஜமாக அனுபவிக்கலாம்.
* செயற்கை கோள்கள், விமானம், விண்கலம், ராக்கெட், ஜெட் போன்றவை எவ்வாறு இயங்குகிறது என்பதனை விளக்கும் வகையில் நிஜ விமானங்கள் மற்றும் உதிரிபாகங்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
* இங்கு அமைக்கப்படும் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், செயற்கை கோள்கள் மற்றும் விண்கலங்களை பார்வையிடலாம்.
* நியூட்டன் விதிகள் உள்பட முக்கிய விஞ்ஞான விதிகள் பற்றி செயல் வழியாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
* இந்த பூங்காவிற்கு வந்து திரும்பும்போது, அவர்களுக்கு வான்வெளி பற்றி முழுமையாக அறியும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
* இந்த பூங்காவிற்கு வரும் யாரும் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பார்வையிடலாம்.
* இஸ்ரோ சார்பில் அமைக்கப்படும் இந்தியாவின் முதல் பூங்கா இதுதான். கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபும் பிளானட்டோரியத்தை விட நவீனமாக, சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.
* இதற்காக 450 கோடி வரை செலவு ஆகலாம் என திட்டமிடப்பட்டு, அதற்கான நிதியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
கலெக்டரின் ஒப்புதலுக்கு பின்னர், நிலம் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டதும் இந்த திட்டம் குறித்து, முறைப்படி இஸ்ரோ தலைவர் சிவன் அல்லது பிரதமர் அறிவிக்கலாம் எனத்தெரிகிறது. இதற்கு சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.