கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட யுத்தத்தின் தொடக்கமே நோட்டு நடவடிக்கை: மோடி

கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தின் தொடக்கமே நோட்டு நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையால் சாமானிய ஏழை மக்கள் பயனடைவர் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியபின்னர் முதன்முறையாக பாஜக நாடாளுமன்ற கட்சி இன்று கூடியது. இக்கூட்டத்தில், நோட்டு நடவடிக்கையை வரவேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

black-money

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய தீமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே எனது அரசின் இலக்கு. இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபடுகிறது.

நமது சொந்த நலனுக்காகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் நலனைப் பேணவோ நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. 70 ஆண்டுகளாக ஏழை, நடுத்தர மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் அவர்கள் உரிமைகளை சுரண்டியிருக்கின்றன.

இவற்றுக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தை நடத்த வேண்டும் என்பதே நமது இலக்கு. அந்த வகையில், ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கை கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தின் தொடக்கமே தவிர முடிவல்ல.

கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் கறுப்புப் பணம் குறித்த தகவலை தாமாகவே முன்வந்து தகவல் அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்:

நோட்டு நடவடிக்கையை பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏழை, எளிய பொதுமக்களா அல்லது கறுப்புப் பண பதுக்கல்காரர்களா யாருக்கு தங்கள் ஆதரவு என்பதை எதிர்க்கட்சிகள் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுதவிர நோட்டு நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகவும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கருத்து:

பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பது இந்தியாவை சிறந்த தேசமாக உருவாக்குவதற்காகவே. மாற்றத்துக்கு வித்திடும் முடிவுகள் அனைத்துமே வலி நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

நிதியமைச்சர் ஜேட்லி, நோட்டு நடவடிக்கையின் பன்முகத்தன்மை குறித்தும் அது பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்பதையும் விவரித்தார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், “நோட்டு நடவடிக்கை நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவுமே எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source: Tamil hindu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *