கன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ள நாட்களில் டால்பின்கள் கரைப்பகுதிக்கு வந்து செல்லும் என்று, மீனவளத்துறையினர் தெரிவித்து வந்தனர். ஆனால் டால்பின்களை யாரும் பார்த்ததில்லை.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட டால்பின்கள், விவேகானந்தர் பாறை அருகில் இருந்து சின்னமுட்டம் துறைமுக பகுதிவரை அணிவகுத்து சென்றன. அவை கூட்டமாக செல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவேகானந்தர் பாறைக்கு படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், டால்பின்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பகல் 11 மணி வரை டால்பின்கள் நீந்திச் சென்றன.
குழந்தை போன்றது
மீனவர்கள் கூறும்போது, “கன்னியாகுமரி ஆழ்கடலில் டால்பின்கள் அதிகளவில் உள்ளன. சில நேரங்களில் ஒன்றிரண்டு டால்பின்கள் கரைப்பகுதிக்கு வருவதுண்டு. ஆனால் இம்முறை தான் 50-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரைப்பகுதிக்கு வந்துள்ளன. அதேநேரம் டால்பின்கள் 3 மணி நேரத்துக்கும் மேல் கன்னியாகுமரி கடல் பகுதியில் தென்பட்டாலும் அவை குதிப்பதை பார்க்க முடியவில்லை.
டால்பின்களை மீனவர்களின் தோழனாக கருதுகிறோம். டால்பின்கள் வருகிறது என்றால், அவற்றின் பின்னால் உயர்ரக மீன்கள் அதிகளவில் பின்தொடர்ந்து வரும். இதனால் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் கிடைக்கும். டால்பின்கள் குழந்தை போன்றது என்பதால், வலையில் சிக்கினாலும் அவற்றை விட்டுவிடுவோம்” என்றனர்.
கடல் அதிர்வு காரணமா?
மீன்வளத்துறையினர் கூறும்போது, “கன்னியாகுமரி கடலில் டால்பின்கள் உள்ளன. ஆனால் அவற்றை பார்ப்பது அரிது. இரு ஆண்டுகளுக்கு பின் தற்போது இரு நாட்களாக டால்பின்கள் கரைப் பகுதிகளில் உலா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலுக்குள் ஏற்படும் வித்தியாசமான அதிர்வால் வழக்கமாக இருக்கும் இடங்களை விட்டு டால்பின்கள் கரைப் பகுதிக்கு வருவதுண்டு. அது கன்னியாகுமரி கடலிலும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
Source : The Hindu