கன்னியாகுமரியில் ரூ.2,766 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; மத்திய மந்திரி நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கின்றனர்.

மேம்பாலங்கள்

தமிழ்நாடு-கேரளா எல்லையில் காரோட்டில் இருந்து வில்லுக்குறி வரையில் 27.250 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கவும், வில்லுக்குறியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரை, 42.703 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கவும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டது.

அதேபோல திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.800 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, காரோடு முதல் வில்லுக்குறி வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும், திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.162.72 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு அடிக்கல் நடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

Source : Dinathanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *